உயர்மின் அழுத்தத்தால் டி.வி., பிரிட்ஜ் நாசம்; தாயில்பட்டியில் பரபரப்பு


உயர்மின் அழுத்தத்தால் டி.வி., பிரிட்ஜ் நாசம்; தாயில்பட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 April 2019 5:16 AM IST (Updated: 13 April 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டியில் உயர் மின் அழுத்தம் காரணமாக மின் வயர் தீப்பிடித்து எரிந்ததோடு வீடுகளில் மின்சார மீட்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவை நாசமாயின.

தாயில்பட்டி,

தாயில்பட்டி பஸ் நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கு நேற்று காலை 6 மணி அளவில் திடீரென்று உயர் மின் அழுத்தத்தால் பழுது ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி பறந்தது. அத்தோடு டிரான்ஸ்பார்மரில் இருந்து சென்ற மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு உருவானது. அந்த பகுதிகளில் கடைகளில் அமர்ந்து இருந்தோரும் வீடுகளில் இருந்தோரும் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது ஒவ்வொரு பகுதியாக தீப்பொறி பறந்த வண்ணம் இருந்தது.

அந்த பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் பட்டாசு ஆலைக்கு தேவையான வெடிஉப்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த குடோனில் தீப்பற்றியது.

அங்கிருந்த அரவை எந்திரம் எரிந்ததோடு வெடி உப்புகளும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி நிறை பாண்டியன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். மேலும் உயர் மின் அழுத்தம் காரணமாக லட்சுமி நகர், பவுன்நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதியில் வீடுகளில் மின் கணக்கீட்டு மீட்டர்கள் எரிந்து நாசமாயின.

மேலும் பலரது வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன. தாயில்பட்டியில் 2 வங்கிகள் உள்ளன. அவை இந்த பகுதியில் அமைந்து இருப்பதால் அங்கு பணி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தார்கள்.

பிரதான தெருவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. உயர் மின் அழுத்த பிரச்சினையால் அந்த பகுதி முழுவதும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மின் வினியோகம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story