மக்கள் எழுச்சியால் 40 தொகுதிகளிலும் “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மக்கள் எழுச்சியால் 40 தொகுதிகளிலும் “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 8:22 PM GMT)

“மக்கள் எழுச்சியால் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மக்கள் மிகுந்த எழுச்சியோடு காணப்படுகிறார்கள். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் வரவேற்கிறார்கள். இதனை பார்க்கும்போது தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பா.ஜனதாவிலும் யார் வேண்டுமானாலும் விருப்ப மனுதாக்கல் செய்யலாம் என்று மாநில தலைவர் என்ற முறையில் கூறினேன். ஆனால் இங்கு என்னை வேட்பாளராக நிறுத்த பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் தி.மு.க.வில் இங்கு கனிமொழி போட்டியிட விரும்பியதால், யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் கூறுகின்றனர்.

இதுதான் தி.மு.க.வின் சர்வாதிகாரமா? அங்கு பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறதா? கணவர் இறந்ததற்காக விளம்பரம் கொடுத்த சாதிக் பாட்ஷாவின் மனைவி தாக்கப்பட்டு, ஜனாதிபதியிடம் சென்று புகார் கொடுக்கிறார். அவருக்கு பெண்ணுரிமை, பேச்சுரிமை கிடையாதா? இதற்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி பதில் கூறட்டும். தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் தி.மு.க.வினர் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கின்றனர். அதனை எப்படி ரத்து செய்ய முடியும்? என்று தி.மு.க.வினர் பதில் கூறட்டும், பிறகு சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்குவது எப்படி? என்று நான் பதில் கூறுகிறேன்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் திறந்த ஜீப்பில் சென்று, தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர் கோவில்பட்டி பாரதிநகர், பசுவந்தனை ரோடு, ஜோதிநகர், முக்கு ரோடு, பங்களா தெரு, கடலையூர் ரோடு, மேட்டு தெரு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புது ரோடு, பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, மாதாங்கோவில் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு, காட்டு நாயக்கன் தெரு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வழிநெடுகிலும் பொதுமக்கள் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் வரவேற்றனர். தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் பிரசாரம் செய்தார்.

Next Story