வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குபபதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. இந்த தேர்தலில் 4,043 வாக்குப்பதிவு எந்திரங்களும் (பேலட் யூனிட்), 4,043 கட்டுப்பாட்டு கருவிகளும் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 4,172 வி.வி.பேட். கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த எந்திரங்கள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவே தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருந்து 11 சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அவை அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகமான தாலுகா அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் பயன்படுத்துவதற்காக அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட். கருவிகள் ஆகியவை கள்ளக்குறிச்சி, செஞ்சி, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், வானூரில் இருந்து நேற்று மினி லாரி, லாரி, வேன்களில் ஏற்றி அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த எந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர், மத்திய பாதுகாப்பு படை வீரர், உள்ளூர் போலீஸ்காரர் ஆகியோரின் மூலமாக துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த எந்திரங்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஏற்கனவே ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தப்பட்டிருந்தது.இந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்த விவரத்தை அந்தந்த மண்டல அலுவலர்கள் உறுதி செய்து தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story