ஈரோட்டில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் - எருமை கன்றுக்குட்டி சாவு

ஈரோட்டில் மின்னல் தாக்கி 12 ஆடுகளும், எருமை கன்றுக்குட்டியும் இறந்தன.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி லட்சுமி (வயது 55). செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமி தனியாக ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகள், எருமை மாடுகளை லட்சுமி பட்டியில் அடைத்து வைத்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் லட்சுமியின் வீட்டுக்கு அருகில் கால்நடைகள் அடைக்கப்பட்டு இருந்த பட்டி தீப்பிடித்து எரிந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் வெப்பம் தாங்க முடியாமல் ஆடு, மாடுகள் ஓலமிட்டன. அதைக்கேட்டு லட்சுமியும், அக்கம் பக்கத்தினரும் திரண்டனர்.
அவர்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் தீயில் கருகி 12 ஆடுகள், ஒரு எருமை கன்றுக்குட்டி, 5 கோழிகள் இறந்தன. மேலும், மற்றொரு எருமை கன்றுக்குட்டிக்கு தீக்காயம் ஏற்பட்டது. கால்நடை டாக்டர் சாரதா அங்கு சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் படுகாயம் அடைந்த எருமை கன்றுக்குட்டி சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து இறந்த கால்நடைகள் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டன.
Related Tags :
Next Story