கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம்


கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 22 April 2019 2:45 AM IST (Updated: 22 April 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. செங்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 32 மி.மீட்டர் மழை பதிவானது.

பாபநாசம் அணை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 17.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1.51 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 54.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 47.60 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்) வருமாறு:-

பாபநாசம்- 1, கடனா நதி- 2, ராமநதி- 20, குண்டாறு- 13, அடவிநயினார்- 16, ஆய்குடி- 40, ராதாபுரம்- 11, சங்கரன்கோவில்- 32, தென்காசி- 11.30

அதிகாரி விளக்கம்

அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதால் கோடை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா? என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “பாபநாசம் அணையில் இருந்து தற்போது குடிநீருக்காக வினாடிக்கு 54.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி மழை இல்லை என்றாலும், ஜூன் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். தற்போது மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 76.60 அடி உள்ளது. அதில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்“ என்றார்.

Next Story