வெளி மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை: அம்மா உணவகங்களில் முறைகேடா? மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை


வெளி மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை: அம்மா உணவகங்களில் முறைகேடா? மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 25 April 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

அம்மா உணவகங்களில் உள்ள பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சத்திரம், அரசு ஆஸ்பத்திரி, பால் மார்க்கெட் செல்லும் வழி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த உணவகங்கள் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இங்கு மலிவு விலையில் இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களில் தினமும் காலை 1,200 இட்லியும், மதியம் 500 சாம்பார் சாதம் மற்றும் 300 தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஒவ்வொரு உணவகத்திலும் மாதம் ரூ.94 ஆயிரம் வீதம் விற்பனை நடக்கிறது. ஆனால் பால், சமையல் கியாஸ் உள்ளிட்டவைகளுக்கு ரூ.48 ஆயிரமும், காய்கறிக்கு ரூ.13 ஆயிரமும், மளிகை பொருட்களுக்கு ரூ.1.26 லட்சமும், ஊழியர்களுக்கு ரூ.90 ஆயிரமும் செலவு ஆவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அம்மா உணவகங்களுக்கு தினமும் வாங்கப்படும் மளிகை பொருட்களை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், இதன்மூலம் ஒவ்வொரு உணவகத்திலும் பல லட்ச ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், சமீபகாலமாக அம்மா உணவகங்களில் சுகாதாரம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், இதன்மூலம் விற்பனை சரிந்துள்ளதாகவும் சிலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், சேலத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து வெளி மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை செய்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உண்மையிலேயே முறைகேடு நடந்திருக்கிறதா? அதற்கு உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக செயல்பட்டார்களா? என்பது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அம்மா உணவகங்களில் முறைகேடு நடந்ததாக மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் ஏதும் வரவில்லை. யாரும் மனுவும் அளிக்கவில்லை. இருப்பினும், அம்மா உணவகத்திற்கு வாங்கும் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? அதன்மூலம் முறைகேடு நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.


Next Story