சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 4,974 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது கலெக்டர் ரோகிணி பேட்டி


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 4,974 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது கலெக்டர் ரோகிணி பேட்டி
x
தினத்தந்தி 25 April 2019 3:30 AM IST (Updated: 25 April 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 4,974 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதனால் முழு பாதுகாப்பில் உள்ளது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர நானும் அவ்வப்போது அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறேன். மேலும் வாக்குச்சாவடி முகவர்கள் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,958 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 4,974 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மீதமுள்ள அரசு ஊழியர்கள் தொடர்ந்து தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story