நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், கஞ்சா வியாபாரி அடித்துக்கொலை - ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை


நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், கஞ்சா வியாபாரி அடித்துக்கொலை - ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கஞ்சா வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூர் மைல்கல் ரெயின்போ காலனி அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவில் ரோட்டின் ஓரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில், அந்த நபர் மைல்கல் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்த அபுதாகீர் (வயது 43) என்பதும், கஞ்சா வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அபுதாகீரும், அதே பகுதியை சேர்ந்த கோபி, அசார், பாவா, ஆனந்த் ஆகியோரும் நண்பர்கள் என்பதும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

அபுதாகீருக்கு நேற்று முன்தினம் இரவில் அதிகளவில் கஞ்சா கிடைத்து உள்ளது. அதை சரிசமமாக பிரித்து எடுப்பதற்காக அவர்கள் 5 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்களுக்கு கிடைத்த கஞ்சாவை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில், யாருக்குமே கஞ்சா கொடுக்க மாட்டேன், நானே எடுத்துச்செல்கிறேன் என்று கூறியதுடன், போலீசிலும் மாட்டிவிடுவேன் என்று அபுதாகீர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற 4 பேரும் சேர்ந்து அவரை தங்கள் கைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து அவரை தூக்கி மோட்டார் சைக்கிளில் வைத்து, வீட்டிற்கு கொண்டு வந்து உள்ளனர். வரும் வழியில் அவர் தவறி கீழே விழுந்து உள்ளார். உடனே அவரை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘அபுதாகீர் உள்பட 5 பேருமே குடிபோதையில் இருந்துள்ளனர். கஞ்சா பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து அபுதாகீரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதனால்தான் அவர் இறந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோபி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மற்ற 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையை சேர்ந்த போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்’ என்றனர்.

Next Story