புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கலெக்டர் தலைமையில் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.
தேனி,
புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, போலீஸ் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உணவுபொருட்கள் வழங்கல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பிற துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிற 29-ந்தேதி புயலாக மாறி கரையை கடக்க உள்ளதாகவும், அதுசமயம், பெரும் புயல் காற்று வீசவும், கன மழை பொழியவும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்படும் நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 12 மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களில் உள்ள முட்செடிகளை அகற்றி வாய்க்கால்களில் தண்ணீர் விரைந்து வழிந்தோடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். சாலைகளில் எதிர்பாராத விதமாக விழும் மரங்களால் ஏற்படும் தடைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்புகள் ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்கு தடையில்லா மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைவசதிகளுடன் கூடிய பாதுகாப்பான முறையில் போதிய நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அங்கு தங்கும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்களது பகுதிகளில் மழை வெள்ளம் குறித்து தண்டோரா மூலமாகவும், ஒலி பெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் தேவையான வயர்லெஸ் கருவிகளை இணைத்து பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
உயிர்காக்கும் மருந்துகள், தொற்றுநோய் வராமல் இருக்க தேவையான நோய்தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்குதலை உறுதி செய்தல், குளோரின் ஏற்றம் செய்தல், தண்ணீர் மாசுபடுவதை தடுத்தல், நடமாடும் மருத்துவ வசதி போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை, தீயணைப்புத் துறையினர் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story