மராட்டியத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்: 17 நாடாளுமன்ற தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்


மராட்டியத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்: 17 நாடாளுமன்ற தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 April 2019 4:14 AM IST (Updated: 28 April 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் 17 நாடாளுமன்ற தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மும்பை,

நாட்டின் பிரதமர் நாற்காலியை நிர்ணயிக்கும் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் மராட்டியம்.

4-ம் கட்ட தேர்தல்

48 நாடாளுமன்ற தொகுதிகள் மராட்டியத்தில் இருக்கின்றன. இங்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

4-வது மற்றும் கடைசி கட்டமாக நாளை (திங்கட் கிழமை) மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 17 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன.

323 வேட்பாளர்கள்

17 தொகுதிகளிலும் மொத்தம் 323 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திறந்தவெளி வாகனங்களில் வீதி, வீதியாக சென்றும், மேலும் பலர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்தும் ஓட்டு வேட்டை நடத்தினார்கள்.

மோடி- ராகுல்காந்தி

தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்களும் வாக்கு சேகரித்தனர். நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பா.ஜனதா மற்றும் சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இதேபோல ஷீரடி சங்கம்னேரில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அகில இந்தியகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆதரவு திரட்டி பேசினார்.

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என அரசியல் வேட்பாளர்கள் தங்களது பலத்தை காண்பிப்பதற்காக தொகுதிகளில் மோட்டார்சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.

இந்த பேரணிகளில் அந்தந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். அவர்கள் கட்சி கொடிகளுடன் வெற்றி தங்களுக்கே என கோஷமிட்டபடி வீதிகளில் வலம் வந்தனர்.

பிரசாரம் ஓய்ந்தது

இதையடுத்து, நேற்று மாலை 6 மணியுடன் 17 தொகுதிகளிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. கடந்த ஒரு மாதமாக பிரசாரத்துக்காக ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிகளின் சத்தமும் ஓய்ந்தது. வேட்பாளர்களுடன் சூறாவளியாக தொகுதிகளில் சுழன்று வந்த தொண்டர்கள் படையும் கலைந்தது.

இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு உள்ளது.

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டமாக நடந்து வருகிறது. இன்று காலை முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இரவுக்குள் வாக்குச்சாவடிக்கு சென்று சேருவார்கள்.

நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மும்பையின் 6 தொகுதிகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

மற்ற மாநிலங்களில்...

இதேபோல பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8, கா‌‌ஷ்மீரில் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) என 8 மாநிலங்களில் 55 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாளை (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மராட்டியத்துடன் சேர்த்து மொத்தம் 72 தொகுதிகளுக்கு 4-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story