எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: சேலம் மாவட்டத்தில் 69 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: சேலம் மாவட்டத்தில் 69 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 30 April 2019 3:30 AM IST (Updated: 30 April 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 69 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 532 பள்ளிகளை சேர்ந்த 44 ஆயிரத்து 333 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் 42 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 254 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 214 மாணவர்கள், 12 ஆயிரத்து 170 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 384 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

அவர்களில் 9 ஆயிரத்து 387 மாணவர்கள், 11 ஆயிரத்து 634 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.91 சதவீதம் தேர்ச்சி ஆகும். இதில் மாணவர்கள் 91.90 சதவீதமும், மாணவிகள் 95.60 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.35 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசு பள்ளியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவிகள், மாணவர்களை விட 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 532 பள்ளிகளில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், சுயநிதி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 236 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 69 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 100-க்கு 100 மதிப்பெண்கள் பாடம் வாரியாக பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

கணக்கு பாடத்தில் 21 பேர், அறிவியலில் 55 பேர், சமூக அறிவியலில் 180 பேர் என மொத்தம் 256 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. கடந்த ஆண்டு (2018) கணிதத்தில் 11 பேர், அறிவியலில் 43 பேர், சமூக அறிவியலில் 493 பேர் என மொத்தம் 547 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது.

மேலும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 94.82 ஆகும். மாணவிகள் 98.83 சதவீதமும், மாணவர்கள் 90.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள், மாணவர்களை விட 8.12 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்தார்.

Next Story