சொந்த ஊருக்கு செல்ல பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சொந்த ஊருக்கு செல்ல பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர்,
நெல்லிக்குப்பம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கீழ் அருங்குணம் காலனியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒரே சமுதாயத்தைச்சேர்ந்த இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருதரப்பைச்சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக எதிர்தரப்பைச்சேர்ந்த சுபாஷ் உள்பட 16 பேர் நெல்லிக்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுபாஷ் உள்பட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சுபாஷ் தரப்பைச்சேர்ந்த 34 குடும்பத்தினர் ஊரை விட்டு விரட்டப்பட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர்கள் ஓட்டுப்போட முடியவில்லையென கூறப்படுகிறது.
இது தொடர்பாக மனு கொடுப்பதற்காக அந்த தரப்பைச்சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் அதிகமானவர்கள் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அரசம்மாள் என்ற பெண் மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்களில் சிலர் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து எங்களால் சொந்த ஊருக்குள் செல்ல முடியாமல் விரட்டப்பட்டு உள்ளோம். எனவே நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story