தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்


தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 8 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

வெள்ளகோவில் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா தலைமையில், தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா கூறியதாவது:–

வெள்ளகோவில் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுபவர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, முறையாக சங்கம் ஏற்படுத்தி பதிவு செய்துள்ளார்கள். இந்த சங்கத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பொன்னிவாடி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். பிறகு அவர் ஒரு அமைப்புடன் சேர்ந்து கொண்டு, சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால், அவரை சங்கத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அதன் பிறகு ரவிச்சந்திரன் சிலருடன் சேர்ந்து கொண்டு, சங்க நிர்வாகிகள் மீது வேண்டுமென்றே போலீசில் புகார் அளிப்பதும், சங்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவதுமாக இருந்து வந்தார். இதனால் சிலர் பாதிக்கப்பட்டார்கள்.

இது குறித்து பலமுறை காங்கயம் துணை போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் அளி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ரவிச்சந்திரன் மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து கொண்டு, புதிய சங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலமாக ஏற்கனவே உள்ள சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எங்களுக்கு முறையாக நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முற்றுகையில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முறையாக மனு கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் விரைவில் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story