போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்று ஓராண்டாகியும் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்படும் ஊழியர்கள்


போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்று ஓராண்டாகியும் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்படும் ஊழியர்கள்
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-09T00:52:25+05:30)

போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்று ஓராண்டாகியும் ஓய்வூதியம் கிடைக்காததால் குடும்பத்தை காப்பாற்ற ஊழியர்கள் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

பனைக்குளம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு குடும்பத்தை காப்பாற்றமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து கழக ராமேசுவரம் கிளையில் பணியாற்றியவர் முருகேசன். கடந்த 1981–ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து போர்மேனாக பணியாற்றியுள்ளார். சுமார் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த 30.4.2018–ந்தேதி அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் அதன்பிறகு அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் ஓராண்டுக்கு பின்னரும் இதுவரை கிடைக்கவில்லையாம். இதன் காரணமாக அவர் வருமானமின்றி பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரைப்போல பலர் குடும்பத்தை காப்பற்ற வெவ்வேறு கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முருகேசன் கூறியதாவது:– கடந்த 1981–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர்ந்தேன். 1983–ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் எனது பணிக்காலத்தில் எனக்கு வழங்கிய பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளேன். இதையடுத்து போர்மேனாக பதவி உயர்வு பெற்ற நான் கடந்த ஆண்டு ஏப்ரல் 30–ந்தேதி ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெறும்போது ஈட்டிய விடுப்பு–391, மருத்துவ விடுப்பு– 290, தற்செயல் விடுப்பு– 4 என விடுப்புகள் கையிருப்பில் இருந்தன. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய எனக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து எனது குடும்ப சூழ்நிலைகளை எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி எனது குடும்பத்தை காப்பாற்ற பெட்ரோல் நிலையத்தில் சேர்ந்து வேலை பார்த்து வருகிறேன். எனக்கு வரவேண்டிய ஓய்வூதியம் எப்போது வரும் என்று தெரியவில்லை. என்னைபோல பலர் ஓய்வூதியம் கிடைக்கமால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story