மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை உழவும், பயிர்கள் சாகுபடியும் செய்யலாம் வேளாண்மை அதிகாரி தகவல்

கோடை மழையினை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ளவும், கோடைகால பயிர்கள் சாகுபடியும் செய்யலாம் என்று வேளாண்மை அதிகாரி கூறினார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. எனவே, கோடை உழவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.
கோடை உழவு மேற்கொள்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் உயர்கிறது. மேலும் கோடை உழவு மேற்கொள்ளப்படும் போது மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவதால் பயிரில் பூச்சி தாக்குதல் குறைகிறது. குறிப்பாக சமீபகாலமாக மக்காச்சோள பயிரில் பெருமளவு சேதத்தினை ஏற்படுத்திய அமெரிக்கன் படைப்புழுக்களின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது.
கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அனைத்து வட்டாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 கிராமங்களில் நீடித்த மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,250 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 18 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோடை மழையினை பயன்படுத்தி கோடைகால பயிர்களான நிலக்கடலை, சிறுதானிய பயிர்கள் மற்றும் பயறுவகை பயிர்கள் பயிரிட விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். நிலக்கடலையில் தரணி, டி.எம்.பி.13, டி.எம்.பி.7 மற்றும் வி.ஆர்.ஐ.2 ஆகிய ரகங்களும், உளுந்து பயிரில் வம்பன் 5, 6, 7 ஆகிய ரகங்களும் பரிந்துரை செய்யப்படுகிறது.
நிலக்கடலை விதைகளுக்கு விதை கிராமத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய விலையிலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.40 மானிய விலையிலும் வேளாண்மைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
உளுந்து விதைகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் கோடை மழையினை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ளவும் கோடை பயிர்கள் சாகுபடி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story