பூமியில் உள்ள கடல்கள் தோன்றியது எப்படி?


பூமியில் உள்ள கடல்கள் தோன்றியது எப்படி?
x
தினத்தந்தி 13 May 2019 7:49 AM GMT (Updated: 13 May 2019 7:49 AM GMT)

“நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” என்றார் வள்ளுவப் பெருந்தகை.

தண்ணீர் இல்லாமல் போனால் யாருக்குமே இந்த உலக வாழ்க்கை சாத்தியமில்லை. அதுபோலவே, மழை இல்லாமல் போனால் மனிதருக்கு ஒழுக்கமும் இல்லாமல் போகும் என்பதே குறள் சொல்லும் கருத்து.

நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை சாத்தியமில்லை எனும் அளவுக்கு சர்வ முக்கியத்துவம் வாய்ந்த நீர் முதன்முதலில் எங்கிருந்து இந்த பூமிக்கு வந்தது என்று கேட்டால் அது யாருக்குமே இன்னும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அது தொடர்பான ஆய்வுகள் கடந்த பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றன. முன்பொரு காலத்தில் அல்லது கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மண்டலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விழுந்த நெருப்புப் பிழம்பான கரித்துண்டாக இருந்த பூமியானது மெல்ல மெல்ல குளிர்ந்தபோது அதில் இருந்த ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் பலவகையாக கலந்தபோது, அதிலிருந்து தண்ணீரும், இன்னபிற உயிர் மூலக்கூறுகளும் உற்பத்தி ஆனதாக பல கருதுகோள்களும், ஆய்வுகளும் கூறுகின்றன.

இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் விண்வெளி ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். உதாரணமாக, சிறுகோள்கள் தொடர்பான ஆய்வுகள் தொடக்ககால சூரிய மண்டலம் மற்றும் கோள்களின் தோற்றம் குறித்த பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. அத்தகைய ஒரு சிறுகோள் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ஜப்பானின் ஹயாபூசா விண்கலம் (Hayabusa probe) உதவியது.

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜக்சா (JAXA)-வில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹயாபூசா விண்கலம் கடந்த 2005-ம் ஆண்டு இடோகாவா (Itokawa) எனும் சிறுகோளை அடைந்தது. முக்கியமாக, இடோகாவாவில் இருந்து தாதுப்பொருள் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு, பூமிக்கு கொண்டுவரக் கிளம்பிய ஹயாபூசா விண்கலம், கடந்த 2010-ம் ஆண்டு, அந்த தாதுப்பொருள் மாதிரிகளை பத்திரமாக பூமிக்கு கொண்டுவந்து சேர்த்தது.

அந்த மாதிரிகள் மீது கடந்த ஒன்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட வேதியியல் ஆய்வுகள் தற்போது சில ரகசியங்களை வெளிச்சத்துக் கொண்டுவந்துள்ளன. அதில் மிகவும் முக்கியமானது: இடோகாவா சிறுகோளின் தாதுப்பொருள் மாதிரிகளில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது. இடோகாவாவின் மாதிரிகள் மீதான அண்ட வேதியியலாளர்களின் ஆய்வுகளில் அம்மாதிரியில் உள்ள நுண் துகள்களின் உள்ளே இருக்கும் தண்ணீர் அளவு உலகில் முதல் முறையாக ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில், இடோகாவா மாதிரியான சிறுகோள்கள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை மோதியபோதே, பூமியிலுள்ள பெருங்கடல்களில் பாதியில் உள்ள தண்ணீரை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்ட வேதியியலாளர் சிலியாங் ஜின்.

எஸ்-வகை சிறுகோள் (S-type asteroid) அல்லது சிலிக்கா நிறைந்த தாதுக்களால் ஆன சிறுகோளான இடோகாவா நம்முடைய சூரிய மண்டலத்தில் உள்ள இரண்டாவது பொதுவான சிறுகோள் வகையைச்சார்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த இடோகாவா சிறுகோள் பிற சிறுகோள் அல்லது கோள்களுடனான மோதலின்போது, ஒரு பெரிய பாறை ஒன்றில் இருந்து உடைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்றும், மேலும் சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் பல சிலிக்கா நிறைந்த சிறுகோள்கள் சுற்றி வரக்கூடிய பகுதியின் உட்பகுதியில், இடோகாவாவும் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, தொடக்ககால சூரிய மண்டலத்தின் எச்சங்களாக கருதப்படும் சிறுகோள்கள், இளம் சூரியனை சுற்றிவந்த மற்றும் கோள்கள் உற்பத்தியான தொடக்ககால கோள் வளையத்தில் இருந்து மீதமானவை என்றும், அதனால், நம் சூரிய மண்டலம் உற்பத்தியான தொடக்க காலக்கட்டத்தில் அதிலிருந்த தாதுக்கள் மற்றும் இதர பொருட்கள் என்னென்ன என்பதை எடுத்துக்காட்டும் வல்லமை இந்த சிறுகோள்களுக்கு உண்டு என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அந்த காலக்கட்டத்தில், தொடக்கநிலை சூரிய மண்டலத்தில் உள்ள உட்கோள்களை அதிக எண்ணிக்கையிலான சிறுகோள்கள் மிகவும் மோசமாக மோதின என்று கூறப்படுகிறது. அந்த மோசமான மோதல் லேட் ஹெவி பம்பார்ட்மென்ட் (Late Heavy Bombardment) என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிறுகோள்கள் பூமியை வந்து மோதியபோது, பலமடங்கு தண்ணீரை கொண்டுவந்து பூமியில் சேர்த்துவிட்டதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹயாபூசா விண்கலம் கொண்டுவந்த இடோகோவா சிறுகோளின் மாதிரிகளில் இருந்து 5 துகள்கள் சிலியாங் ஜின் மற்றும் மைத்ரேயி போஸ் ஆகிய இரண்டு அண்ட வேதியியலாளர்களுக்கு ஆய்வுக்காக கொடுக்கப்பட்டன. அவற்றின் மீதான ஆய்வுகளில் பூமியில் காணப்படக்கூடிய மற்றும் தண்ணீர் நிறைந்த பைரோக்சீன் (pyroxene) எனும் தாதுப்பொருள் இடோகாவா மாதிரிகளில் இருந்தது கண்டறியப்பட்டது.

நானோசிம்ஸ் (NanoSIMS: Nanoscale Secondary Ion Mass Spectrometer) எனும் அதி நவீன கருவியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இடோகாவா மாதிரியில் சுமார் பத்து லட்சத்தில் 698 முதல் 988 பகுதிகள் அளவு (698 to 988 parts per million) தண்ணீர் இருந்ததாக கண்டறியப்பட்டது.

இடோகாவா சிறுகோள் தொடக்கத்தில் சுமார் 20 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இருந்ததாகவும், அதன்பின்னர் பல்வேறு மோதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக பல துண்டுகளாக உடைந்துபோன இடோகாவா சிறுகோள் இறுதியில் 1,800 அடி நீள சிறுகோளாக கடந்த 80 லட்சம் ஆண்டுகளாக இருந்துவருவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தத்தில், பூமியில் உள்ள தண்ணீரில் பாதி அளவு எஸ்-வகை சிறுகோள்கள் மூலமாக பூமியை வந்தடைந்ததாக இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story