சேலத்தில் ரெயில் என்ஜின் முன் பாய்ந்து கட்டிட மேஸ்திரி தற்கொலை


சேலத்தில் ரெயில் என்ஜின் முன் பாய்ந்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2019 3:45 AM IST (Updated: 19 May 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மது அருந்துவதை குடும்பத்தினர் கண்டித்ததால் விரக்தி அடைந்த கட்டிட மேஸ்திரி ரெயில் என்ஜின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சூரமங்கலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65), கட்டிட மேஸ்திரி. இவருக்கு பூபாலன், பிரபாகரன் என்ற மகன்களும், லதா என்ற மகளும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை குடும்பத்தினர் எதற்காக மது அருந்திவிட்டு வருகிறீர்கள்? என கேட்டு கண்டித்தனர். பின்னர், அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் எனக்கூறி வீட்டில் இருந்து வெளியே விரட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மணி, பொன்னம்மாபேட்டை அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு இரவில் வந்து அங்கேயே அமர்ந்திருந்தார். இதை அறிந்த ரெயில்வே கேட் கீப்பர், தண்டவாளத்தில் அமரக்கூடாது என்றும், வேறு இடத்திற்கு செல்லுமாறு மணியிடம் அறிவுறுத்தினார். ஆனால் அதை கேட்காமல் அவர் அங்கேயே இருந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் ரெயில் என்ஜின் ஒன்று சேலத்தில் இருந்து மின்னாம்பள்ளி வரை சென்றது. அப்போது, மணி ரெயில் என்ஜின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், இதுபற்றி சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் அங்கு சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மது அருந்துவதை குடும்பத்தினர் கண்டித்ததால் கட்டிட மேஸ்திரி ரெயில் என்ஜின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story