புதுடெல்லியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் தம்பதி மகன் உடல் இன்று வேலூர் கொண்டு வரப்படுகிறது

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் தம்பதியின் மகன் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் கொண்டு வரப்படுகிறது.
வேலூர்,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நிக்கல் தாமஸ். இவருடைய மனைவி மாயா மேரி. டாக்டர்களான இருவரும் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாக குடியிருப்பில் தங்கி, வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களின் மகன் ரிஷிஜோஸ்வா (வயது 24), புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு முதுநிலை ஆங்கில பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பல்கலைக்கழக நூலக கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வகுப்பறை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக்கண்ட மாணவர்கள் கதவை உடைத்து உடனடியாக ரிஷிஜோஸ்வாவை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரிஷிஜோஸ்வாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவர் ரிஷிஜோஸ்வா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும், அதனால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. அவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ரிஷிஜோஸ்வா தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இருவரும் நேற்று முன்தினம் மாலை புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரிஷிஜோஸ்வாவின் உடலை பார்த்து இருவரும் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் தம்பதியினர் மகன் உடலுடன் இரவு 9 மணியளவில் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருவதாகவும், பின்னர் அங்கிருந்து வாகனத்தில் வேலூருக்கு இன்று காலை வர உள்ளனர். ரிஷிஜோஸ்வாவின் உடல் அவரின் பெற்றோர் பணிபுரியும் மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு, நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் வேலூர் டோல்கேட் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story