குடிபோதையில் ரகளை செய்த 8 பேர் மீது திராவகம் வீச்சு நகை பட்டறை தொழிலாளி கைது


குடிபோதையில் ரகளை செய்த 8 பேர் மீது திராவகம் வீச்சு நகை பட்டறை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 4:20 PM GMT)

கோயம்பேட்டில் குடிபோதையில் ரகளை செய்து, மனைவியை தாக்கிய 8 பேர் மீது திராவகம் வீசியதாக நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

கோயம்பேடு, நெற்குன்றம், முனியப்பா நகர், 3-வது தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் கன்னியப்பன் (வயது 33). வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி.

இதே வீட்டின் 2-வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அழகுமுத்து (38), கருப்பசாமி(32), வாஞ்சிநாதன்(18), வீரமணி(21), எஸ்.வேல்முருகன்(23), பொ.வேல்முருகன்(24), ப.வேல்முருகன் (25), அசோக் (19) ஆகிய 8 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி, ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர் ஆகியோர் சென்று ஏன் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து 8 பேரும் சேர்ந்து கன்னியப்பன் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் வீட்டில் வைத்திருந்த வெள்ளிப்பொருட்களை பாலிஷ் செய்யும் திராவகத்தை எடுத்து வந்து 8 பேர் மீதும் வீசினார். திராவகம் உடலில் பட்டவுடன் 8 பேரின் உடலும் வெந்து போனது. இதையடுத்து 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே 8 பேரும் தாக்கியதில் ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் மீது திராவகம் வீசியதாக கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story