கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது


கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2019 3:30 AM IST (Updated: 21 May 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்ததாக என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள மேவாணியை சேர்ந்தவர் சாவித்ரி (வயது 45). விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி கோபியில் இருந்து மேவாணிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் 2 மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

இதில் மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் உட்கார்ந்திருந்தவர் திடீரென சாவித்ரி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து கோபி போலீசில் சாவித்ரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோபி நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையின் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர்கள் சித்தோட்டை சேர்ந்த என்ஜினீயரான கவின்குமார் (24), பூபதிராஜா (23) என்பதும், 2 பேரும் சேர்ந்து சாவித்ரியின் நகையை பறித்து சென்றதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவின்குமார், பூபதிராஜா ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 4 பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story