கொங்கணாபுரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

கொங்கணாபுரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எடப்பாடி,
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னந்தேரி முதல் கொல்லப்பட்டி வரை தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அதன்பின்னர் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வெட்டி போடப்பட்ட சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த 4 மாதங்களாக இந்த நிலை நீடித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொங்கணாபுரம் அருகே கன்னந்தேரி பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு சேலம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெட்டிப் போட்ட சாலையை சீரமைக்கக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் சாலை அமைத்து தர நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story