குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ராணுவ வீரர் பலி - சகோதரர் படுகாயம்


குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து ராணுவ வீரர் பலி - சகோதரர் படுகாயம்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் ராணுவ வீரர் பலியானார். உடன் சென்ற சகோதரர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னூர்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூரை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் பிரதீப் (வயது 26), பிரதீஷ் (26), இரட்டையர்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் ராணுவ வீரராக பிரதீப் பணியாற்றினார். அவர் மாரத்தானில் கலந்து கொள்ள பயிற்சி எடுப்பதற்காக, கோவை மதுக்கரையில் உள்ள ராணுவ மையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு தற்காலிகமாக அங்கு பணியாற்றினார். பிரதீஷ் பாலக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதீப் தனது சொந்த ஊரில் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கான பணிகளை கவனிப்பதற்காக அவர் விடுமுறையில் இருந்தார். இதற்கிடையே வீடு கட்ட வங்கியில் கடன் பெற சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அவற்றை பெற வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமுக்கு வர பிரதீப் முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் நேற்று காலை 6.30 மணியளவில் முண்டூரில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அவரது சகோதரர் பிரதீஷ் உடன் சென்றார். மோட்டார் சைக்கிளை பிரதீப் ஓட்டினார். பின்னால் பிரதீஷ் அமர்ந்து இருந்தார். அவர்கள் காலை 10 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு கார் சென்றது.

குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்து இருந்ததால் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டு இருந்தன. பிரதீப், பிரதீஷ் ஆகியோர் மரப்பாலம் அருகே சென்றபோது சாலையோரம் ஆபத்தான நிலையில் நின்ற மரம் ஒன்று முறிந்து அவர்களுக்கு முன்னால் சென்ற கார் மீது விழுந்தது. மேலும், அந்த காரை பின்தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் விழுந்து அமுக்கியது.

இதில் மரத்துக்கு கீழ் மோட்டார் சைக்கிளுடன் பிரதீப், பிரதீஷ் ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்த முருகன் (36), அவரது மாமா விஜயகுமார் (52) ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன் பாபு, சுந்தர பெள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராணுவ வீரர் பிரதீப் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது சகோதரர் பிரதீசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து வெலிங்டன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, கவுசல்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நின்றன. சாலையில் கிடந்த மரம் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

Next Story