ஜோலார்பேட்டை அருகே 60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்


ஜோலார்பேட்டை அருகே 60 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ஒன்றியம், மூக்கனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் திருசெல்வம் (52). இவர்கள் 2 பேருக்கும் இடையே வழி பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த வாரம் வெங்கடேசனுக்கு சொந்தமான 3 அடி நிலத்தை திருசெல்வம் தனக்கு சொந்தமான இடம் என கூறியதால், 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 27-ந் தேதி வெங்கடேசன் தரப்பில் அவரது சகோதரர்கள் குமார், மோகன் மற்றும் வீரபத்திரன், ராஜேஷ் ஆகியோரும், திருசெல்வம் தரப்பில் அவரது உறவினர்கள் காளியப்பன், அருட்செல்வன், சதன்குமார், சங்கீதா, இந்திராகாந்தி, ரேகா ஆகியோரும் ஒருவரையொருவர் கத்தி, தடியால் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து கடந்த 30-ந் தேதி வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் நேற்று காலை அடியத்தூர் தாயப்பன்வட்டத்தில் உள்ள 60 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தனக்கு கொலை மிரட்டல் விடுத்த திருசெல்வம் உள்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி எத்துராஜ் தலைமையில், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெங்கடேசனிடம் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை மீட்டு, கீழே அழைத்து வந்தனர்.

அதன்பிறகு வெங்கடேசனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனிடம் வெங்கடேசன் மீண்டும் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருசெல்வத்தை கைது செய்தனர். திருசெல்வம் கொடுத்த புகாரின்பேரில், வெங்கடேசனை கைது செய்தனர். இருதரப்பில் இருந்து கொடுத்த புகாரின்பேரில், 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story