21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் ஜானகிராமன் உடல் அடக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் ஜானகிராமன் உடல் அடக்கம்; மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 11 Jun 2019 11:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:57 PM GMT)

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. முன்னோடி தலைவருமான ஜானகிராமன் (வயது 78) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் அவர் மரணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து ஜானகிராமனின் உடல் புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜானகிராமனின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும். 3 நாள் துக்கமும் அனுசரிக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜானகிராமனின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தநிலையில் ஜானகிராமனின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூரில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்காக அவரது தாய், தந்தையின் சமாதி அருகே அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஜானகிராமனின் உடல் நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது சொந்த ஊரான ஆலத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே அங்கு அதாவது காலை 9.20 மணிக்கே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து இருந்தார். தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், ஜெயமூர்த்தி, தமிழக எம்.எல்.ஏ.க்கள் அங்கையற்கண்ணி, மாசிலாமணி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்திருந்தனர்.

காலை 10.05 மணிக்கு அடக்கம் நடைபெறும் இடத்துக்கு ஜானகிராமனின் உடல் கொண்டுவரப்பட்டது. அவரது உடலை புதுவை காவல் துறையினர் சுமந்து வந்தனர். புதைகுழி அருகே கொண்டு வைக்கப்பட்டதும் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின் ஜானகிராமனின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி முறைப்படி அகற்றப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதையாக வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க ஜானகிராமனின் உடல் அவரது பெற்றோரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Next Story