அடுத்த மாதம் சட்டசபை கூட்டம்: புதுவை பட்ஜெட் தொடர்பாக நாராயணசாமி ஆலோசனை

அடுத்த மாதம் சட்டசபை கூட்டப்படுவதையொட்டி புதுவை மாநில பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களினால் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளிப்போகிறது.
மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 4 மாதத்துக்கான (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை) அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த (ஜூலை) மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது பட்ஜெட் தொடர்பான நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆர்வம் காட்டி வருகிறார். ஒவ்வொரு அமைச்சர்களின் கீழ் உள்ள துறைகளில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் ஆகியோர் வகித்து வரும் துறைகள் குறித்து நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, விவேக் பாண்டா, ஜவகர் மற்றும் அரசுத் துறை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் அவற்றுக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story