திருச்செந்தூரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் வழங்கினார்


திருச்செந்தூரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:00 PM GMT (Updated: 14 Jun 2019 2:05 PM GMT)

திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 

திருச்செந்தூர் காவல் உட்கோட்டத்தில் விபத்தினை தடுக்கும் விதமாக, கடந்த 1–ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற புதிய திட்டம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் ஆகியோர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இலவச ஹெல்மெட் 

இதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கியதோடு, அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதேபோன்று திருச்செந்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தியதில், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற மொத்தம் 100 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி அறிவுரை கூறினர்.

Next Story