ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


ஆக்கிரமிப்பு வீடுகளின் மின்இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்புகளை துண்டிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் 37 பெண்கள் உள்பட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இடிகரை,

கோவை கவுண்டம்பாளையம், எருக்கம்பெனி அருகே உள்ள ஜீவாநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி, காலி செய்யப்பட்ட 143 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது, மற்ற வீடுகளை இடிக்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று மீதமுள்ள 120 வீடுகளின் மின் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்காக மின்சாரத்துறை அதிகாரிகள் வந்தனர். உடனே, அங்குள்ளவர்கள் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்று கூறி அதிகாரிகளை ஜீவா நகருக்குள் வர விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர்.

இதை அறிந்த சாய்பாபா காலனி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த குடியிருப்புவாசிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உட்பட 64 பேரை கைது செய்து மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பை மின்சார வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.

Next Story