மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்கரெட்டியுடன் எச்.விஸ்வநாத் திடீர் சந்திப்பு

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்கரெட்டியை எச்.விஸ்வநாத் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்கரெட்டியை எச்.விஸ்வநாத் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகிரங்க குற்றச்சாட்டு
கர்நாடக மாநில ஜனதா தளம் (எஸ்) தலைவராக இருப்பவர் எச்.விஸ்வநாத். அவர் சமீபகாலமாக சித்தராமையாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தான் ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவராக இருந்தும், தன்னை கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் சேர்க்கவில்லை என்று அவர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். எச்.விஸ்வநாத்தின் கருத்து, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் பதவியை எச்.விஸ்வநாத் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடுத்தார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. பதவியில் நீடிக்குமாறு அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா வலியுறுத்தி வருகிறார். ஆனால் எச்.விஸ்வநாத் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
அரசியலில் பரபரப்பு
இதற்கிடையே எச்.விஸ்வநாத், சித்தராமையாவின் அரசியலை ஒருங்கிணைத்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி அவர், அரசியலில் சித்தராமையாவின் எதிரிகளை சந்தித்து பேசி வருகிறார். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து எம்.பி.யாகியுள்ள சீனிவாசபிரசாத்தை எச்.விஸ்வநாத் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய காங்கிரசை ேசர்ந்த ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வை அவரது வீட்டில் எச்.விஸ்வநாத் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். கர்நாடக அரசியலில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் இல்லை
இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று எச்.விஸ்வநாத் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராமலிங்கரெட்டி எனது நீண்டகால நண்பர். கர்நாடக சட்டசபைக்கு நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் வந்தோம். அந்த நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன். இதில் அரசியல் எதுவும் இல்லை. சித்தராமையா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் கிடையாது. அவர் கூட்டணியில் முக்கியமான தலைவர். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story