வால்பாறையில் வளர்ச்சிப்பணிகளை உடனே செய்து முடிக்க வேண்டும்; ஆய்வுக்கூட்டத்தில் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.வற்புறுத்தல்


வால்பாறையில் வளர்ச்சிப்பணிகளை உடனே செய்து முடிக்க வேண்டும்; ஆய்வுக்கூட்டத்தில் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.வற்புறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:15 AM IST (Updated: 24 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வளர்ச்சிப்பணிகளை உடனே செய்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.வற்புறுத்தினார்.

வால்பாறை,

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்குழு கூட்டம் கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர்(பொ) சரவணபாபு, கூட்டுறவு நகரவங்கித்தலைவர் வால்பாறை அமீது, துணைத்தலைவர் மயில்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக டெண்டர் விடப்பட்ட பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிங்கோனா பகுதி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதி சாலைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்டேட் பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் டெண்டர் விடப்பட்ட பணிகளை உடனே செய்து முடிப்பதற்கு ஆணையாளர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டேன்டீ பகுதி சாலை, வேவர்லி எஸ்டேட் சாலை, காஞ்சமலை எஸ்டேட் சாலை, சக்தி,தலநார் எஸ்டேட் பகுதி சாலைகளை உடனே சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வால்பாறையில் ஆற்றோர பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மழைகாலங்களில் ஆற்றுத்தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் பாதுகாப்பு தடுப்புசுவர் கட்டித்தருவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ள இடங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொ) சரவணபாபு பேசும்போது:- ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றோர பகுதிகள் உள்பட பல்வேறு பொதுமக்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிமேற்கொள்வதற்கான உத்தரவுகளும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை தொடங்குவதிலும், தொடங்கிய பணிகளை செய்வதில் காலங்கடத்தும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டெண்டர் விடப்பட்ட பணிகள் முழுவதும் 90 நாட்களுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும்.

அதே போல டேன்டீ சாலை பராமரிப்பு பணி உடனே தொடங்கப்படும். ஆற்றோர பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பாதுகாப்பு தடுப்பு சுவர் கட்டும் பணியும் உடனே தொடங்கப்படும் என்றார்.கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story