திருவேற்காடு அருகே கூவம் நதிக்கரையோரம் இருந்த 8 வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
திருவேற்காடு அருகே கூவம் நதிக்கரையோரம் இருந்த 8 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் கூவம் நதிக்கரையோரம் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. கூவம் நதிக்கரை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் அந்த வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அதில் 8 வீடுகளின் உரிமையாளர்கள் மட்டும் தங்களது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மற்ற வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கிடையில் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மீதம் உள்ள 8 வீடுகளையும் இடிக்க உத்தரவிட்டது.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இதையடுத்து பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று கூவம் நதிக்கரையோரம் உள்ள 8 வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளை இடிக்க கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் கதறல்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். மூதாட்டிகள், பெண்கள் சிலர் தங்களது வீடுகளை இடிக்க வேண்டாம் என்று கூறி தரையில் அமர்ந்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
எனினும் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் கூவம் நதிக்கரையோரம் இருந்த 8 வீடுகளையும் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நதிக்கரையோரம் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு 33.5 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி. இடிக்கப்பட்ட 8 வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது” என்றனர்.
Related Tags :
Next Story