நிலத்தடி நீருடன் கடல்நீர் கலந்ததால் டெல்டா பகுதியில் குறுவை பயிர்கள் கருகின - விவசாயிகள் கவலை


நிலத்தடி நீருடன் கடல்நீர் கலந்ததால் டெல்டா பகுதியில் குறுவை பயிர்கள் கருகின - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 Jun 2019 3:30 AM IST (Updated: 26 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீருடன் கடல் நீர் கலந்ததால், டெல்டா பகுதியில் பயிர் செய்திருந்த குறுவை நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு, ஆலம்பாடி கிராம பகுதியில் உள்ள விவசாயிகளும் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இவர்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மோட்டார் மூலமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

இந்த நிலையில் நடவு செய்த 30 நாட்களிலேயே நெற்பயிர்கள் ஒவ்வொன்றாக கருக தொடங்கின. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஏதேனும் நோய் தாக்குதலாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அதற்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. இதன் காரணமாக தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

பயிர்கள் இதுபோன்று கருகி போனதற்கு காரணம், கொள்ளிடம் ஆற்றில் செயல்படுத்தப்படும் மணல் குவாரிகள் மற்றும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவை காரணம் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக சி.அரசூர், குஞ்சம்மேடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அரசு அமைத்து அதிக ஆழத்தில் மணல் அள்ளி வருகிறது. அதேநேரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காகவும், ஆற்றில் இருந்து அதிகப்படியான ஊற்று கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.இதுபோன்ற காரணத்தினால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. அதாவது கடல் நீர்மட்டத்திற்கும் கீழ் சென்று விட்டதால், தற்போது கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்து வருகிறது. எனவே தண்ணீர் முழுவதும் உப்பு தன்மையாக மாறிவிட்டது. இந்த தண்ணீரை தான் குறுவை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இதன் காரணமாகவே பயிர்கள் முழுவதும் கருகி வருகிறது. தற்சமயம் எங்கள் கிராம பகுதியில் சுமார் 30 ஏக்கர் பயிர்கள் இதுபோன்று கருகிவிட்டன. மேலும் பல இடங்களில் பாதிக்கும் அபாயம் ஏற்படுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எங்கள் பகுதியில் அரசு திணிக்க பார்க்கிறது. இதே நிலை நீடித்தால் நிச்சயம் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும். வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிட வேண்டும், அதோடு பயிர்கள் கருகி நஷ்டத்தை சந்தித்து இருக்கும் விவசாயிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்டா பகுதியை பொறுத்தவரை சம்பா சாகுபடி முழுவதும் வாய்க்கால் நீரை பயன்படுத்தியே நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் குறுவைக்கு பெரும்பாலும் நிலத்தடி நீரையே விவசாயிகள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. தற்போது நிலவும் வறட்சியால், நிலத்தடி நீரும், வேகமாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆலம்பாடி, அத்திப்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். கடும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் கடல் பகுதியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் அமைந்து இருப்பதால், கடல் நீர் உட்புகுந்து இருக்கலாம். தொடர்ந்து மழை பெய்தால் இந்த நிலை மாறிவிடும்.

அதே நேரத்தில் உப்பு தன்மையுடைய நீரை பயிர்களுக்கு பாசனம் செய்தால் அவை கருகும் நிலை ஏற்படும். இதை தவிர்க்க ஜிப்சம், ஜிங்சல்பேட் போன்ற உரங்களை ஏக்கருக்கு 2 மூட்டை என்கிற அளவில் பயன்படுத்தினால் இந்த நிலை குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் வறட்சியான காலக்கட்டத்தில் மண் மாதிரி, நிலத்தடி நீரை உரிய முறையில் பரிசோதனை செய்து, அதிகாரிகள் பரிந்துரைக்கும் பயிர்களை பயிர் செய்தால் இத்தகைய இழப்பீடுகளில் இருந்து விவசாயிகள் தங்களை நிச்சயம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். 

Next Story