ஊத்துக்கோட்டையில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி


ஊத்துக்கோட்டையில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை- சத்தியவேடு சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதியில் இந்த சாலை அமைந்துள்ளதால் லேசான மழை பெய்தாலும் சாலை ஓரமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது மழை நீர் கால்வாய் அல்லது கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசு சாலை விரிவாக்கத்துக்கு மட்டும் நிதி ஒதுக்கியது தவிர மழை நீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் லேசான மழை பெய்தாலும் கூட சாலை ஓரமாக மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்த சாலையில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வீடுகள் மற்றும் கடைகள், ஓட்டல்கள், டீக்கடை நடத்துவோர் கழிவு நீரை சாலையிலேயே விட்டு விடுகின்றனர். மழைநீருடன் இந்த கழிவு நீரும் கலக்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடு்க்கவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தில் தான் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன. பஸ்களில் இருந்து இறங்கும் பயணிகள் சாலை ஓரமாக தேங்கி நிற்கும் அசுத்தமான மழை நீரில் தடுமாறி இறங்கி செல்ல வேண்டி உள்ளது. சிலர் நிலை தடுமாறி மழை நீரில் விழும் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

Next Story