தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பு சிறுவன் உள்பட 7 கொள்ளையர்கள் கைது போலீஸ் வாகனத்தின் மீது காரை மோதியதால் சிக்கினார்கள்

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த சிறுவன் உள்பட 7 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனத்தின் மீது காரை மோதியதால் 7 பேரும் சிக்கி இருந்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மற்றும் ராமநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டி மர்மநபர்கள் நகை, பணத்தை பறித்து வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க பெங்களூரு புறநகர் விஜயபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னபட்டணா போலீஸ்காரர்களான நாராயணசாமி மற்றும் மதுகுமார் போலீஸ் வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடை அருகே வரும்போது போலீஸ் வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. உடனே போலீஸ்காரர்கள் கீழே இறங்கி காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த காரில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும், மிளகாய் பொடி பாக்கெட்டுகளும் இருந்தது.
7 பேர் கைது
இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். மேலும் கொள்ளையடிக்க திட்டமிட்டு காரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த 7 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த சந்தீப் ரெட்டி (வயது 23), இவரது கூட்டாளிகள் சீனிவாஸ்(21), நவீன்(19), பிரதீப்(23), ரஜினிகாந்த் என்ற பில்லா(22), ஆர்.சீனிவாஸ்(23) மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் என்றும் தெரிந்தது. இவர்கள் 7 பேரும் சேர்ந்து கார்களை திருடியுள்ளனர். பின்னர் அந்த கார்களில் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வருவார்கள்.
குறிப்பாக நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடையையொட்டி காரை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் மீது தங்களது கார் மூலம் மோதுவார்கள். அப்போது தங்கள் கார் சேதம் அடைந்து விட்டதாக கூறி, வாகனங்களில் இருப்பவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிப்பதை 7 பேரும் தொழிலாக வைத்திருந்தனர். கைதான 7 பேரிடமும் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 7 பேரையும் கைது செய்திருப்பதன் மூலம் 26 கொள்ளை வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான 7 பேர் மீது சென்னபட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story