வள்ளியூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தொழிலாளியிடம் ரூ.3½ லட்சம் மோசடி


வள்ளியூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தொழிலாளியிடம் ரூ.3½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 30 Jun 2019 10:30 PM GMT (Updated: 30 Jun 2019 6:21 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தொழிலாளியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக, சஸ்பெண்டான போலீஸ் ஏட்டு மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குளக்கட்டாகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துமணி (வயது 39). இவர் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய உறவினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியை சேர்ந்த தியாகராஜன். இவர் முத்துமணிக்கு வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக வள்ளியூர்- ஏர்வாடி மெயின் ரோடு அருகே உள்ள கண்ணன், அவருடைய மனைவி இசக்கியம்மாள் ஆகியோரிடம் முத்துமணியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கத்தார் நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு தங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் 10 நாட்களில் விசா எடுத்து தருவதாகவும் கண்ணன் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய முத்துமணி முதலில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை ஏற்பாடு செய்து கடந்த 15-12-2017 அன்று கண்ணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை இசக்கியம்மாளின் வங்கி கணக்கில் முத்துமணி செலுத்தியதாக கூறப்படுகிறது. மீதிப்பணத்தை தான் வேலைக்கு சேர்ந்ததும் கொடுத்து விடுவதாக முத்துமணி கூறியுள்ளார்.

ஆனால் இதுவரையில் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் கண்ணன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துமணி, இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அவருடைய மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களில் கண்ணன், சஸ்பெண்டு செய்யப்பட்ட (பணியிடை நீக்கம்) போலீஸ் ஏட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story