தொப்பம்பட்டி பகுதியில், சொந்த செலவில் குளத்தை தூர்வாரிய ஊராட்சி செயலர்கள்


தொப்பம்பட்டி பகுதியில், சொந்த செலவில் குளத்தை தூர்வாரிய ஊராட்சி செயலர்கள்
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொப்பம்பட்டி பகுதியில் சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் பணியை ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் மேற்கொண்டனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 30 ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாகவே உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக தேனி மாவட்ட பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆண்டிப்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியது.

இதன் காரணமாக பயிர்சாகுபடியில் ஈடுபட முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை மக்களின் பங்களிப்போடு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த ஊராட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தங்களின் சொந்த செலவில் தூர் வாரி மேம்படுத்த ஊராட்சி செயலர்கள் முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக தொப்பம்பட்டி அருகே உள்ள இலந்தைகுளத்தை தூர் வாரும் பணி ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜான்போஸ்கோ கொடியசைத்து பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டி, ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தொப்பம்பட்டி அருகே உள்ள இலந்தைகுளம் மூலம் தொப்பம்பட்டி உள்பட 5 ஊராட்சிகள் பாசன வசதி பெற்று வந்தது. மேலும் இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்த குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் அருகில் உள்ள 2 ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே தான் இந்த குளத்தை தூர் வாரி மேம்படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Next Story