கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 5 July 2019 10:15 PM GMT (Updated: 5 July 2019 4:31 PM GMT)

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என பாசன விவசாயிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று முதல் போக பாசனத்திற்கு பொதுப்பணித்துறை அலுவலர்கள் தண்ணீரை திறந்து விட்டனர்.

அதன்படி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 38.25 கனஅடி தண்ணீர் உள்ளது. தற்போது அணையின் வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதம் என மொத்தம் 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜணப்பரஅள்ளி மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணை பாசன திட்டத்தின் கீழ் 2 பிரதான வாய்க்கால்கள் மற்றும் 26 சிறு பாசன ஏரிகள் மூலமாக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. தற்போது அணைக்கு நீர் வரத்து 12 கனஅடியாக உள்ளது. மழையை பொறுத்து அணையில், இருந்து பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் அளவு மாறுப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story