கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் அருகே, குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் - பொதுமக்கள் பீதி


கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் அருகே, குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 5 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 5:46 PM GMT)

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி, காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுவது வாடிக்கையாக விட்டது. போதுமான வனத்துறை ஊழியர்கள் பணியில் இல்லாத காரணத்தால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க முடியாமல் திணறும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள வியூ ஹில், ஹாப்பி வேலி, காம்பாய் கடை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சில நேரங்களில் காட்டெருமைகள் பொதுமக்களை துரத்தும் சம்பவங்கள் தொடர்வதால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள்.

தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை குடிக்க காட்டெருமைகள் வீட்டு வாசல்களுக்கு அடிக்கடி வருகின்றன. அப்போது வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தாலும், எதிர்பாராத நேரத்தில் அவை தாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன. காட்டெருமைகளால் பள்ளிகளுக்கு சென்று திரும்பும் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் எந்நேரமும் பீதியுடன் வெளியே சென்று வர வேண்டி உள்ளது. சில நேரங்களில் வீடுகளின் முன்பு காட்டெருமைகள் வந்து நிற்பதால், வெளியே செல்வதையே விரும்புவதில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழும் முன்பு காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டி விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை அருகில் குட்டியுடன் 3 காட்டுயானைகள் நள்ளிரவில் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் அங்கேயே சுற்றித்திரிந்த காட்டுயானைகள், அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், காட்டுயானைகள் அங்கு சுற்றித்திரிகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த வழியே கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story