மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்க கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்க கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு கலைக்கல்லூரி மற்றும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்தும், உடனே மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்க மாநிலஅரசை வலியுறுத்தியும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்தனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் நுழைவு கதவுகளும் பூட்டப்பட்டன. இரும்பினால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் குந்தவைநாச்சியார் அரசு கலைக்கல்லூரி மற்றும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவ, மாணவிகள் நுழைவு வாயில் பகுதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இவர்களிடம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒவ்வொரு துறைக்கும் 2 பேர் வீதம் 2 கல்லூரிகளில் இருந்தும் 20 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்கலாம் என போலீசார் கூறினர். இதை மாணவ, மாணவிகளும் ஏற்று கொண்டனர். மற்ற மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இதையடுத்து 20 பேரை போலீசார் தங்களது வாகனங்களிலேயே ஏற்றி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். இவர்களை பின்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான மாணவர்கள் ஒன்று கூடியதால் திடீரென இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறிய பின்னரும் எப்படி கோஷங்கள் எழுப்பலாம் என்றனர்.
இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 20 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை படித்து பார்த்த அவர், கல்வி உதவித்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிக்கணினி இன்னும் 1 மாதத்திற்குள் வழங்கப்படும் என்றார். இதை மாணவர்களும் ஏற்று கொண்டனர்.
Related Tags :
Next Story