கல்வராயன்மலையில் நடைபெற உள்ள கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

கல்வராயன்மலையில் நடைபெற உள்ள கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை கரியாலூரில் கோடை விழா வருகிற 13, 14-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடை விழாவில் ஒவ்வொரு துறைகளும் தங்கள் துறை சார்ந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுவது தொடர்பாக அரங்குகள் அமைத்து செயல்விளக்க கண்காட்சி அமைக்க வேண்டும். அந்தந்த துறைகளில் அரசின் நலத்திட்ட உதவிகளை மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுற்றுலாத்துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையினர், விழா மேடை மற்றும் தேவையான இடங்களில் பூஞ்செடிகள் வைத்து அலங்காரம் செய்தல் வேண்டும்.
அதுபோல் கல்வித்துறையினர், கல்வராயன்மலையில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகள் மூலம் சிறந்த கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டுத்துறை சார்பில் மலைவாழ் மக்களின் விளையாட்டு போட்டிகள், மல்லர்கம்பம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கோடை விழா நடைபெறும் நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறை வசதியை அமைத்துக்கொடுக்க வேண்டும். சுகாதார துறையினர், விழா நடைபெறும் இடம் அருகில் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மஞ்சுளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story