கிருஷ்ணகிரி அருகே விபத்தில் ராணுவ வீரர் பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் ராணுவ வீரர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 22). ராணுவ வீரர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நாகேந்திரன், ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் சரக்கு வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாகேந்திரன் சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நாகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த நாகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story