கோத்தகிரி அருகே, நீரோடையை சுத்தம் செய்த இளைஞர்கள்


கோத்தகிரி அருகே, நீரோடையை சுத்தம் செய்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 12:19 AM GMT)

கோத்தகிரி அருகே நீரோடையை இளைஞர்கள் சுத்தம் செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து அரவேனு, தட்டப்பள்ளம், கொட்டகம்பை வழியாக நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடையை தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. இதனால் நீரோட்டம் பாதிக்கப்பட்டதுடன், தண்ணீர் மாசடைந்தது. எனவே நீரோடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நீரோடையை தாங்களாகவே சுத்தம் செய்ய அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து நீரோடையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் புதர் செடிகளை வெட்டி அகற்றினர். இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது, நீரோடையை தூர்வார அதிகாரிகளை எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அவர்கள் முன்வராததால், நாங்களே சுத்தம் செய்ய முடிவு எடுத்தோம். எங்களது இந்த நடவடிக்கையால் எதிர்வரும் மழைக்காலத்தில் நீரோடையின் நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

மேலும் தண்ணீரும் மாசுபடாது என்றனர்.

Next Story