கோத்தகிரியில், நாவல் பழ விளைச்சல் அதிகரிப்பு - மார்க்கெட்டில் கிலோ ரூ.200-க்கு விற்பனை


கோத்தகிரியில், நாவல் பழ விளைச்சல் அதிகரிப்பு - மார்க்கெட்டில் கிலோ ரூ.200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 9 July 2019 3:30 AM IST (Updated: 9 July 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நாவல் பழ விளைச்சல் அதிகரித்து உள்ளது. மார்க்கெட்டில் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் நாவல் பழ சீசன் காலமாக உள்ளது. அதன்படி சீசன் காரணமாக தற்போது கோத்தகிரியில் நாவல் பழ விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனை பொதுமக்கள் பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ நாவல் பழம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு நாவல் பழம் சிறந்த மருந்ததாக இருப்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து கோத்தகிரியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் சிறியதாக இருந்தாலும், அதிக சுவை கொண்டதாக உள்ளன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. குடல் புண்ணை போக்கவும், பித்தத்தை தணிக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும், இதயத்தை சீராக இயங்க செய்யவும், ரத்த சோகையை குணப்படுத்தவும், சிறுநீரக வலியை நிவர்த்தி செய்யுவும், சிறுநீரக கற்களை கரைக்கவும், மண்ணீரல் மற்றும் கல்லீரல் கோளாறுகளை நீக்கவும் நாவல் பழம் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக உடலுக் குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தின் விதைகளை உலர வைத்து, பொடியாக்கி தண்ணீருடன் கலந்து காலையும், மாலையும் குடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் சீசன் காரணமாக நாவல் மரங்களை நாடி கரடிகள் வர தொடங்கி விட்டன. மேலும் மரங்களில் கொத்து, கொத்தாக பழுத்து தொங்கும் நாவல் பழங்களை பறிக்க பொதுமக்களும், வியாபாரிகளும் வனப்பகுதிகளுக்குள் சென்று வருகின்றனர். எனவே அவர் களை கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதிகளுக்குள் செல்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-

கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சும் கற்பூரம் மற்றும் சீகை மரங்களை அகற்றி, நாவல் உள்ளிட்ட சோலை மர நாற்றுகள் நடப்பட்டு வந்தன. இவ்வாறு நடவு செய்யப்பட மரங்களில் தற்போது சீசன் காரணமாக நாவல் பழங்கள் கொத்து, கொத்தாக பழுத்து தொங்குகின்றன.

சுவை மிகுந்தும், மருத்துவ குணம் கொண்டும் இப்பழங்கள் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவற்றை பறிக்க வனப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு பறிக்க செல்வோரில் பெரும்பாலானோர் கரடிகள் பழத்தை உண்ண வரும் என்ற ஆபத்தை உணராமல் இருக்கின்றனர். இதனால் அவர்கள் கரடிகள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். எனவே வனப்பகுதிக்குள் நாவல் பழங்களை பறிக்க செல்வோர் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தனியாக செல்லக்கூடாது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பழங்களை பறிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story