மாநிலங்களவை தேர்தல், “எனது வேட்புமனு ஏற்கப்பட்டால் தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெறுவார்” - வைகோ பேட்டி


மாநிலங்களவை தேர்தல், “எனது வேட்புமனு ஏற்கப்பட்டால் தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெறுவார்” - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 10:00 PM GMT (Updated: 8 July 2019 11:45 PM GMT)

மாநிலங்களவை தேர்தலில் “எனது வேட்புமனு ஏற்கப்பட்டால் தி.மு.க. வேட்பாளர் வாபஸ் பெறுவார்“ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக செல்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால், மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு ம.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் ம.தி.மு.க.வின் அனைத்து சகோதரர்களும் நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினர். அதன்பேரில் நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.

அதுவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நான் போட்டியிடுவதாக இருந்தால் தான், இல்லை என்றால் பேச்சுவார்த்தை வேறுவிதமாக செல்ல வாய்ப்பு இருந்தது. இது எழுதப்படாத ஒப்பந்தம். இந்தநிலையில் தேசத்துரோக வழக்கில் எனக்கு தண்டனை வழங்கப்படாது என்று நம்பினேன். ஏனெனில், சுதந்திரத்துக்கு முன்பு மகாத்மாகாந்தி, பாலகங்காதர திலகர் ஆகியோர் இதே சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டனர்.

அப்போது ஜவகர்லால் நேரு உள்பட பல தலைவர்கள் அந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றனர். சுதந்திரத்துக்கு பின்னரும் நேரு அதை நீக்க வேண்டும் என்றார். ஆனால், அந்த சட்டப்பிரிவு நீக்கப்படவில்லை. அதேநேரம் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், யாரும் தண்டிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், எனக்கு ஓராண்டு தண்டனை வழங்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் பொடா சட்டத்தில் கைதான ஒரே எம்.பி. நான் தான். அதேபோல் சுதந்திரத்துக்கு பின் தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றதும் நான் தான். நான் என்ன தேசத்துரோகம் செய்தேன். மகாத்மாகாந்தி சிலை செய்து அதை கொளுத்தியவர்களும், கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்றவர்களும் தேசப்பக்தர்களாக இருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது. சில வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டாலே போட்டியிட முடியாது. எனவே, என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இதற்கிடையே தீர்ப்புக்கு முன்பே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒருவேளை எனக்கு தண்டனை விதிக்கப்பட்டு போட்டியிட முடியாத நிலை உருவானால், மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று நான் தான் கூறினேன்.

எனவே, தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாளை (இன்று) நடைபெறும் வேட்புமனு பரிசீலனைக்கு போக முடியாது. ஒரு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு செல்கிறேன். பரிசீலனையில் எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், என்.ஆர்.இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. எனவே, ம.தி.மு.க. தொண்டர்கள் தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story