என்ஜினீயர் மீது சேற்றை ஊற்றி தாக்குதல், ‘மகனை காப்பாற்றும்படி நாராயண் ரானே என்னை வற்புறுத்தினார்’ - மந்திரி பேசும் வீடியோவால் பரபரப்பு

என்ஜினீயர் மீது சேற்றை வீசிய தனது மகனை காப்பாற்றும்படி நாராயண் ரானே தன்னை வற்புறுத்தியதாக மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
ரத்னகிரி மாவட்டம் கன்கவலியில் மழை காரணமாக மும்பை- கோவா நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக சேதம் அடைந்ததை கண்டு கோபம் அடைந்த கன்கவலி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேயின் மகனுமான நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் பிரகாஷ் செடேகர் என்பவர் மீது சேற்றை ஊற்றி தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நிதேஷ் ரானே உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பிரகாஷ் செடேகரை புனேயில் உள்ள அவரது வீட்டில் சென்று மாநில மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பிரகாஷ் செடேகரின் குடும்பத்தினருடன் அவர் பேசும் வீடியோ ஒன்று நேற்று சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், ‘நான் சம்பவத்தை அறிந்ததும் உடனே ரத்னகிரி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு பேசி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய கூறினேன்.
அதன்பிறகு என்னை நாராயண் ரானே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் இந்த பிரச்சினையில் இருந்து தனது மகனை காப்பாற்றும்படி வற்புறுத்தினார். நான் அவரிடம் இது எல்லாம் என்ன செயல் என்று கேட்டேன்' என்று கூறுகிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story