ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறக்கோரி சுதாகர் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட காங்கிரசார்

ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்த சுதாகர் எம்.எல்.ஏ.வை காங்கிரசார் முற்றுகையிட்டு ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தினர்.
பெங்களூரு,
ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வெளியே வந்த சுதாகர் எம்.எல்.ஏ.வை காங்கிரசார் முற்றுகையிட்டு ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தினர். அப்போது அங்கு பா.ஜனதாவினர் குவிந்ததால் அவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதையடுத்து, விதானசவுதாவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சுதாகரை முற்றுகையிட்டனர்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான எம்.டி.பி.நாகராஜ் மற்றும் சுதாகர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய நேற்று மாலையில் விதானசவுதாவுக்கு வருகை தந்தனர்.
பின்னர் எம்.டி.பி.நாகராஜும், சுதாகரும், சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும், மந்திரி பிரியங்க் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சுதாகரை முற்றுகையிட்டதுடன், அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சுதாகர் முயன்றார். ஆனால் மந்திரி பிரியங்க் கார்கேவின் பிடியில் சிக்கி கொண்டதால் சுதாகரால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.
வாக்குவாதம்
அதன்பிறகு, மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அறைக்கு சுதாகரை அழைத்து சென்றனர். அங்கு வைத்து ராஜினாமாவை வாபஸ் பெறும்படி தினேஷ் குண்டுராவ், பிரியங்க் கார்கே வலியுறுத்தினார்கள். ஆனால் ராஜினாமாவை வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிவிட்டு விதானசவுதாவில் இருந்து சுதாகர் புறப்பட்டு சென்றுவிட்டார். இதற்கிடையில், சுதாகரை காங்கிரஸ் கட்சியினர் பிடித்து வைத்து கொண்டது பற்றி அறிந்ததும் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விதானசவுதாவுக்குள் திரண்டு வந்தனர். அப்போது விதானசவுதாவில் வைத்து ரேணுகாச்சாரியா எம்.எல்.ஏ., காங்கிரசாருக்கு எதிராக திடீரென்று கோஷங்களை எழுப்பினார்.
அப்போது அங்கு வைத்து ரேணுகாச்சாரியாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அதே நேரத்தில் சம்பவம் பற்றி அறிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் விதானசவுதாவுக்குள் திரண்டு வந்தனர். இதனால் விதானசவுதாவில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதே நேரத்தில் விதானசவுதா முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விதானசவுதாவின் 3 நுழைவு வாயில்களையும் போலீசார் அடைத்து வைத்தனர். நுழைவு வாயில் பகுதிகளில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய போலீசார், சுதாகர் எம்.எல்.ஏ.வை பத்திரமாக மீட்டு விதானசவுதா வெளியே அனுப்பிவைத்தனர். அதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில், சுதாகரை காங்கிரசார் முற்றுகையிட்ட சம்பவத்திற்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story