உடும்பியம் வி.வி.சர்க்கரை ஆலையில் 1½ லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம்


உடும்பியம் வி.வி.சர்க்கரை ஆலையில் 1½ லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம்
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 8:00 PM GMT)

வேப்பந்தட்டையை அடுத்த உடும்பியம் வி.வி சர்க்கரை ஆலையில் 2018-19ம் ஆண்டுக்கான சிறப்பு கரும்பு அரவை பருவம் தொடக்க விழா நடைபெற்றது.

அரியலூர்,

வேப்பந்தட்டையை அடுத்த உடும்பியம் வி.வி சர்க்கரை ஆலையில் 2018-19ம் ஆண்டுக்கான சிறப்பு கரும்பு அரவை பருவம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலையின் செயல் இயக்குனர் சின்னப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை பொது மேலாளர் முத்துக்குமார், பொது மேலாளர்கள் புண்ணியமூர்த்தி, வின்சென்ட், துணை பொது மேலாளர் ஜெயராமன், முதுநிலை மேலாளர் சுடலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் இயக்குனர் சின்னப்பன் கூறும்போது, ஆலையின் இந்த சிறப்பு அரவை பருவத்தில் சுமார் 1½ லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் கரும்புக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கரும்பு விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பை முன்கூட்டியே அறுவடை செய்வதற்காக இந்த சிறப்பு அரவை பருவம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதம் செயல்படும் இந்த சிறப்பு அரவை பருத்தில் கரும்பு அறுவடை செய்ய எந்திரங்கள், கரும்பு வெட்டும் குழு ஆட்கள் மற்றும் கரும்பை விவசாயிகளின் வயல்களில் இருந்து ஆலைக்கு கொண்டு செல்வதற்கான வாகனங்கள் அனைத்தும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். விழாவில் ஆலையின் மேலாளர் சந்திரசேகரன், வி.வி மினரல் நிறுவன மேலாளர் ரமேஷ்குட்டன், மனித வள மேலாளர் சேதுராமன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், பணி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.


Next Story