திருப்பத்தூரில் நாளை மக்கள் நீதிமன்றம்: பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி நீதிபதிகள் விழிப்புணர்வு


திருப்பத்தூரில் நாளை மக்கள் நீதிமன்றம்: பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி நீதிபதிகள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 5:52 PM GMT)

திருப்பத்தூரில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி நீதிபதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பத்தூர்,

தேசிய சட்ட பணிகள் ஆணை குழுவின் அறிவுரைப்படி நாளை (சனிக்கிழமை) திருப்பத்தூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், திருப்பத்தூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும்.

நீதிமன்றத்தில் சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்தமான ரிட் மனுக்கள், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்வி கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களில் கூடுதல் மாவட்ட நீதிபதி டி.இந்திராணி, சட்டபணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான ஆர்.வேலரஸ், சிறப்பு சார்பு நீதிபதி என்.எஸ்.ஜெய்பிரகாஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.சுரேஷ் ஆகியோர் ஸ்டிக்கர் ஒட்டினர்.

இது குறித்து சார்பு நீதிபதி வேலரஸ் நிருபர்களிடம் கூறியதாவது :-

பொதுமக்கள் மற்றும் வழக்காடுபவர்கள் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரசம் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு முத்திரைதாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. வழக்குகளில் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழக்கு தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. வழக்கில் வந்தவர், தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு அவர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story