களக்காடு தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


களக்காடு தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 July 2019 9:30 PM GMT (Updated: 11 July 2019 6:53 PM GMT)

களக்காடு தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

களக்காடு, 

களக்காடு தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலையணை

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை பிரசித்திபெற்ற சுற்றுலாதலமாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். அந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கடுமையாக இருந்ததால் மழையின்றி தண்ணீர் வரத்து இல்லாமல் தலையணை வறண்டு காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து தலையணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

சாரல் மழை

சுற்றுலா பயணிகளும் அதிகளவில் தலையணைக்கு வந்து தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த வாரத்தில் சாரல் மழை இல்லாததால், தண்ணீர் வரத்து இல்லாமல் தலையணை மீண்டும் வறண்டு காணப்பட்டது.

கடந்த 2 நாட்களாக களக்காடு மலையின் உள்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தலையணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. நேற்று தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுகிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு பணி

சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருவதை தொடர்ந்து தலையணை பகுதியில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story