எம்.எல்.ஏ.வை வரவேற்று வைத்த பேனர் கிழிப்பு: கொல்லங்குடி கோவிலில் சத்தியம் செய்த கிராம மக்களால் பரபரப்பு


எம்.எல்.ஏ.வை வரவேற்று வைத்த பேனர் கிழிப்பு: கொல்லங்குடி கோவிலில் சத்தியம் செய்த கிராம மக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2019 11:45 PM GMT (Updated: 12 July 2019 7:53 PM GMT)

எம்.எல்.ஏ.வை வரவேற்று வைத்த பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக தாங்கள் அந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று கூறி கொல்லங்குடி கோவிலில் கிராம மக்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா விளங்குடி கிராமத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் 5 பேனர்களை யாரோ கிழித்துள்ளனர். இது, அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கிராம மக்கள் ஒன்று கூடி இதுபற்றி விசாரித்தனர். அப்போது நாங்கள் அந்த பேனரை கிழிக்கவில்லை என்று கூறினர். பேனர் கிழிப்பு சம்பவத்தில் எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால், கிராம மக்கள் அனைவரும் காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் சத்தியம் செய்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அந்த கிராமத்தில் இருந்து ஒரு பஸ் மற்றும் வேனில் 95 பேர், கொல்லங்குடி கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் கொல்லங்காளி அம்மன் முன்பு, கோவில் பூசாரி முன்னிலையில் சூடம் ஏற்றி, அவர்கள் வரிசையாக வந்து, ‘‘தாங்கள் பேனரை கிழிக்கவில்லை’’ என்று கூறி சத்தியம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு தங்கள் கிராமத்துக்கு சென்றனர். இதனால் அந்த கோவில் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story