பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஓய்வு பெற்ற பெண் அலுவலரிடம் 10 பவுன் நகை திருட்டு வடமாநில வாலிபர்களுக்கு வலைவீச்சு


பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஓய்வு பெற்ற பெண் அலுவலரிடம் 10 பவுன் நகை திருட்டு வடமாநில வாலிபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 July 2019 4:44 AM IST (Updated: 15 July 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஓய்வு பெற்ற பெண் அலுவலரிடம் 10 பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற 2 வடமாநில வாலிபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.

வந்தவாசி,

வந்தவாசி நகரில் உள்ள பிராமணர் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா (வயது 64), ஓய்வு பெற்ற ஒன்றிய ஆணையாளர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து சாந்தா தான் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர்கள் குக்கர் கேட்டனர். இதனால் சாந்தா வீட்டினுள் சென்று குக்கர் எடுத்து வந்து கொடுத்தார். குக்கரில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் பொடியை கலந்த அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த கவரிங் நகைகளை அதில் போட்டு சாந்தாவிடம் கொடுத்து அடுப்பில் வைக்கும்படி கூறியதுடன், 2 விசில் வந்தவுடன் குக்கரை திறந்து பார்த்தால் நகை பளபளப்புடன் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற சாந்தா குக்கரை அடுப்பில் வைப்பதற்கு முன் அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் கவரிங் நகை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சாந்தா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற 2 வடமாநில வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Next Story